திருக்குறள் (Thirukural)

Wednesday, 13 May, 2015

தமிழ் மொழி அல்ல , உயிர்.


அமெரிக்கா செல்வதற்கான குடியேற்ற அனுமதி பெற (விசா) நேர்காணலுக்கு அமெரிக்க தூதரகம் (Consulate) சென்றிருந்தோம். அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து நாம் பதில் அளிப்பது சிரமமாக இருக்கும் என்று தோன்றியதால், நேர்காணல் தமிழில் வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
நேர்காணலின்போது மொழி பெயர்ப்பாளருக்காகக் காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் ஆகியும் மொழி பெயர்ப்பாளர் யாரையும் காணாமல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்து கொண்டு, எங்களை நேர்காணல் செய்ய இருந்த குடியேற்ற அதிகாரி ஒரு பெண் என்பதால் 'குட் மார்னிங் மேம்' என்று நாங்கள் சொல்ல... அவரோ அழகு தமிழில் 'வணக்கம்' சொல்லி எங்களை அதிர வைத்தது மட்டுமல்லால், தொடர்ந்து தமிழிலேயே முழு நேர்காணலையும் நடத்தி முடித்து எங்களுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி (விசா) வழங்கி, எங்களுடைய பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களையும் சொல்லி வழியனுப்பினார்.
அவருடைய தமிழ் உச்சரிப்பும் அவர் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகளும் என்னை பிரமிப்படைய வைத்தது. மறந்தும் கூட அவர் ஒரு ஆங்கில வார்த்தையை அவருடைய உரையாடலில் கலக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேர்காணல் முடிந்து கிளம்பும்போது அவருடைய தமிழார்வத்தை மறக்காமல் பாராட்டி விட்டுத்தான் வந்தோம். மனசுக்குள், 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாரதியின் கவிதை வரிகள் வந்து போயின.
தமிழ்நாட்டில், தமிழ் குடும்பத்தில் பிறந்தும், பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படிப்பதால் 'எங்களுக்கு தமிழில் படிக்க வராது, எழுத வராது' என்று தமிழைக் கொலை செய்யும் நம் நாட்டு பிள்ளைச் செல்வங்களை நினைத்து எனக்கு வேதனையாக இருந்தது. தமிழ் படிப்பதை கேவலமாக நினைக்கும் நிலை எப்போது மாறும்?
அழியாத செல்வங்களாய் இருக்கும் நம் தமிழ் இலக்கியங்களை நம் நாட்டினர் போற்றும் காலம் எப்போது வரும் என்று மனசுக்குள் ஏக்கமாக இருக்கிறது.
ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் நமக்கு வேலை நிமித்தம் தேவைதான் என்றாலும்... நமக்கு உயிர் போன்றது நம் தாய்மொழிதான். அதைக் கசடறக் கற்காவிட்டாலும், 'தமிழில் படிக்கத் தெரியாது... முயற்சி பண்றேன்னு' பிறமொழி பேசுபவர்கள் தமிழ் பேசுவது போல கசக்கிப் பிழியாமல், படிக்கவாவது முயற்சி செய்யலாம்.
இப்போது வெளிநாட்டில் வாழும் நம் தமிழ் நாட்டினர் மட்டுமல்லாமல், மற்ற மொழிகளைப் பேசுபவர்களும் வார விடுமுறையில் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் கோயில்களில் மொழிவாரியாக வகுப்புகள் எடுக்கிறார்கள். குழந்தைகளும் உற்சாகமாகக் கற்றுக் கொள்கிறார்கள்.
உலகின் மூத்த மொழியாம் நம் தமிழ் மொழிக்குத் தமிழர்களாகிய நாம்தான் தலை வணங்கி, மொழியையும் வாழ வைத்து, நாமும் வாழ வேண்டும். தமிழ் மொழியை நம் குழந்தைகளுக்கு வெல்லப் பாகாக இனிக்கச் செய்வது பெற்றோர்களாகிய நம் கையில்தான் உள்ளது .
தாய்மொழிதான் அவரவர்களுக்கு உயிர்மொழி..! எனவே நாமும் நம்முடைய தாய்மொழியாம் அமுதத் தமிழை உயிராக மதிப்போம்.

No comments:

Post a Comment